WELCOME TO MURARBADU

ANY WHRE ANY TIME CONTACT MURARBADU.BLOGSPOT.COM +917373118517 +918144684433

  • Events
  • Artists
  • About us
  • Gallery
    • Gallery 1 col
    • Gallery 2 cols
    • Gallery 3 cols
  • Our blog
  • Contact

3-4 நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள் 3-4.

Posted by frozali at 9:57:00 pm


முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு இபுறாஹிம் (அலை ) முதல் இஸ்லாமிய வரலாற்று சுருக்கம்.

மொத்தம் 100 பகுதிகள். இது தொடர்ந்து வரும் ஆதலால் வாசகர்கள் இப்பக்கத்தை FAVORITE / BOOKMARK ல் பதிந்து கொள்வதுடன் தாங்களுக்கு தெரிந்தவர்கள் , நன்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி அனைவரையும் தாங்களின் பிள்ளைகளையும் படிக்க செய்யுங்கள்.

வாசகர்கள் அறிந்திராத விஷய களஞ்சியம். சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்.

முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.
*************************************************
3] யூதர்கள்
நிலமெல்லாம் ரத்தம் 3 - பா.ரா

அது, 44வது வருடம். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாற்பத்து நான்காவது வருடம். ஜெருசலேம் நகரிலிருந்த நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்திருந்தது.

நீதிமன்றம் என்றால் அரசின் நீதிமன்றம் அல்ல. அது யூத மதகுருக்களின் நீதிமன்றம். மன்னர்களைக் காட்டிலும் அன்றைக்கு அவர்களுக்குத்தான் அதிகாரம் இருந்தது. மத குருக்கள் ஒரு தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள் என்றால் மன்னரேகூட அதனை மாற்றுவது சிரமம். காரணம், மக்கள் மன்னர்களை மதித்தார்களே தவிர, மதகுருக்களைத்தான் வணக்கத்துக்குரியவர்களாக நினைத்தார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் சொல்வதுதான் தீர்ப்பு.

வழக்கு என்ன? அப்போது ஹாஸ்மோனியன்களின் (Hasmoneans - ஆழ்ந்த மதப்பற்றுமிக்க ஒரு யூதவம்சம்.) ஆளுகைக்கு உட்பட்டிருந்த அந்தப் பகுதியில் கவர்னராக இருந்தவர்,

ஓர் உள்நாட்டுப் புரட்சிக் குழுவினருடன் யுத்தம் செய்யவேண்டியிருந்தது. கலவரக்காரர்களை அடக்குவது கவர்னரின் பணியே அல்லவா?
அதை அவர் திறம்படச் செய்து முடித்தார். கலவரம் முடிந்தது. புரட்சிக்குழுவினர் அடக்கப்பட்டார்கள். புரட்சிக்காரர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இனி, முறைப்படி விசாரணை நடத்தப்படவேண்டும்.
அங்கேதான் பிரச்னை ஆரம்பித்தது. கவர்னர் அவர்களிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளவில்லை.
மாறாக, அரசுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவர்கள் என்று சொல்லி,
புரட்சிக்குழுத் தலைவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்.
இது மிகப்பெரிய குற்றம். கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்காமல் எப்படி கொலை செய்யலாம்? கவர்னரே ஆனாலும் குற்றம்தான். நீதிமன்றத்துக்குவந்த வழக்கின் சுருக்கம் இதுதான். எப்படியும் கவர்னருக்கு அதிகபட்ச தண்டனைதான் கிடைக்கும் என்று ஜெருசலேம் மக்கள் நினைத்தார்கள். அதிகபட்சம் என்றால் மரணம்.

ஆனால், விசாரணை ஆரம்பிப்பதற்குச் சற்று நேரம் முன்னதாக ஹாஸ்மோனிய மன்னர் ஹிர்கனஸ் (Hyrcanus2) ரகசியமாகச் செயல்பட்டு, கவர்னர் ஜெருசலேத்திலிருந்து தப்பிச் சென்றுவிடுவதற்கு ஓர் ஏற்பாடு செய்தார். மன்னரே ஆனாலும் ரகசியமாகத்தான் இதைச் செய்யவேண்டியிருந்திருக்கிறது!

ஜெருசலேத்திலிருந்து வெளியேறிய கவர்னர், மூச்சைப் பிடித்துக்கொண்டு வடக்குத் திசையாக ஓடினார். அவரது இலக்கு, எப்படியாவது சிரியாவை அடைந்துவிடுவது. அதன்பின் ஜெருசலேம் மதகுருக்களால் பிரச்னை இருக்காது.

சிரியா அப்போது ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. வேறு தேசத்தவர் என்றாலும் இந்த கவர்னரின் ஆட்சி செய்யும் திறமை குறித்து அப்போது சிரியாவை ஆண்டுகொண்டிருந்தவர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால், அடைக்கலம் கோரி வந்தவரை அரவணைத்து, சிரியாவின் ஒரு சிறு மாகாணத்துக்கு அவரை கவர்னராக நியமித்து கௌரவித்துவிட்டார்கள்.
உயிர்பிழைக்க வந்த சிரியாவில், பதவியும் கிடைத்ததுமே அவர் ரோமானியத் தளபதி மார்க் ஆண்டனியுடன் (Mark Antony) நட்பையும் நெருக்கத்தையும்
வளர்த்துக்கொண்டார். (பிறகு ஆண்டனியே ரோமானிய மன்னராகவும் ஆனார்.) அவ்வப்போது நிறைய பணமும் தந்து நீடித்த நல்லுறவை உறுதிப்படுத்திக்கொண்டார்.

காரணம், அவருக்கு ஒரு கனவு இருந்தது. எப்படியாவது ஜுதேயாவின் (Judaea இஸ்ரேலின் அன்றைய பெயர்) மன்னனாக தான் ஆகிவிடவேண்டும். அதற்கு முதலில் ஹாஸ்மோனியர்களின் ஆட்சியை ஒழிக்கவேண்டும். அதற்கு ரோமானியர்களின் உதவி வேண்டும். தளபதி மனம் வைத்தால் காரியம் நடக்கும்.

ஒரு சரியான சர்வாதிகாரியின் மனோபாவம் அந்த கவர்னருக்கு இருந்தது. நினைத்ததைச் செயல்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தார். பொறுமையாக, தருணத்துக்குக் காத்திருந்து மார்க் ஆண்டனியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். நண்பர் என்று ஆகிவிட்டபடியால் அவரும் கவர்னரின் விருப்பத்துக்குத் தன் சம்மதத்தைத்
தெரிவித்து ஒத்துழைப்பதாக வாக்களித்தார்.

விஷயம் ஜெருசலேமுக்குத் தெரியாமல் இருக்குமா? அந்த கவர்னர் யார், எப்படிப்பட்டவர், அவர் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன அபாயங்கள் நேரும் என்றெல்லாம் எடுத்துச் சொல்வதற்காக இரண்டு பெரிய தூதுக்குழுக்களை ஜெருசலேம் சமூகம் சிரியாவுக்கு அனுப்பியது.

ஆனால் பயனில்லை. ஆண்டனி, தூதுக்கு வந்தவர்களைச் சிறைப்பிடித்து, மரணதண்டனை அளித்துவிட்டு, ஒரு படையுடன் ஜெருசலேமை நோக்கி கவர்னர் முன்னேற உடனடி ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தார்.
ஐந்து மாதங்கள் வரை முற்றுகை நீடித்தது. மிகக் கடினமான யுத்தமாக அது இருந்தது. ஆனால், கவர்னர் தப்பிச்செல்வதற்கு உதவிய ஹாஸ்மோனிய மன்னரால் இறுதியில் அவரது முற்றுகையையும் தாக்குதலையும் சமாளிக்க முடியவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த கவர்னரிடம் ஆட்சி அதிகாரத்தை இழந்து மன்னர் போரில் வீழ்ந்தார்.
ஜுதேயா தேசத்தையே ரத்தக்களறியாக்கிவிட்டுத்தான் அந்த முன்னாள் கவர்னரால் ஆட்சிப்பீடத்தில் ஏறமுடிந்தது. அவரை நன்கறிந்த இஸ்ரேலிய மக்கள், இனி தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்று அஞ்சிக் கலங்குவதை தம் தினசரிக் கடமையாக்கிக்கொண்டார்கள்.

கி.மு. 37_ம் ஆண்டிலிருந்து தொடங்கி அடுத்த முப்பத்து மூன்று வருடங்கள், தன் மரணம் வரை ஜுதேயா எனப்பட்ட இஸ்ரேலை ஆண்ட அவரது பெயர் ஹெரோத். இவரது காலத்தில்தான் பாலஸ்தீன யூதர்கள் முதல் முதலில் அந்த மண்ணில் வாழ்வதிலுள்ள சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவந்தது.

இத்தனைக்கும் ஹெரோத் ஒரு யூதர். ஆனால், சர்வாதிகாரி என்றானபிறகு மதம் ஒரு பொருட்டா என்ன? தனது பதவிக்குப் பிரச்னை தரக்கூடியவர்கள் என்று அவர் நினைத்த நண்பர்கள், உறவினர்கள் தொடங்கி சாதாரணப் பொதுமக்கள் வரை யாரை வேண்டுமானாலும் கொன்று வீழ்த்தினார்.

எந்த ரோமானிய மன்னன் ஆண்டனி, தான் பதவிக்கு வருவதற்கு உதவி செய்தாரோ, அதே ஆண்டனி, அங்கே ஆட்சியை ஆக்டேவியன் (Octavian) என்கிற தமது அரசியல் எதிரியிடம் இழந்து மரணமடைந்தபோது, சற்றும் யோசிக்காமல் ஆக்டேவியனுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார் ஹெரோத். அகஸ்டஸ் என்கிற பட்டப்பெயருடன் ஆக்டேவியன், ரோமானிய மன்னராக முடிசூட்டிக்கொண்டபோது, ஹெரோத் தன்னை ஆதரித்தமைக்காகக் கூப்பிட்டு கௌரவித்துப் பரிசுகளும் பதக்கங்களும் அளித்து
அனுப்பிவைத்தார்!

தமது ராணுவத்தை மிக கவனமாகப் பராமரித்த ஹெரோத், ஓரளவு மட்டுமே யூதர்களை அதில் சேர்த்தார். பெரும்பாலும் வெளிநாட்டு வீரர்களையே தருவித்து, தன் ராணுவத்தில் இடம்பெறச் செய்தார். ரோம், பிரான்ஸ் போன்ற தேசங்களிலிருந்தெல்லாம் அப்போது ஹெரோதின் ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கப்பட்டார்கள்.

தவிர, முன்னர் தாம் கவர்னராக இருந்த காலத்தில் திருமணம் செய்துகொண்டிருந்த ஹாஸ்மோனியப் பெண்ணையும் அவளுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, டோரிஸ் என்று ஜெருசலேமிலிருந்து புதிதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். போதாமல், இன்னும் எட்டுப் பெண்களையும் மணந்துகொண்டு சுமார் பதினான்கு குழந்தைகளைப் பெற்றார். எல்லாமே அரசியல் காரணங்களுக்காக!

ஹெரோதின் காலத்தில் பல இஸ்ரேலிய யூதர்கள், வேறு வழியில்லாமல் நாட்டைத் துறந்து வெளியேறிப்போனார்கள். சகிக்கமுடியாத ஆட்சி என்று வருணிக்கப்பட்டாலும் ஹெரோத் ஒரு தீவிர யூதர் என்பதால், தாம் பதவிக்கு வந்ததுமுதல் யூதர்களுக்கான பாதுகாப்பு என்கிற பெயரில் நிறைய கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவந்தார். அவர் செய்தவற்றுள் உருப்படியான பணி என்றால், பாலைவனமாக இருந்த அன்றைய இஸ்ரேலில், நிலமற்ற அத்தனைபேருக்கும் ஒரு துண்டு நிலமாவது கிடைக்கும்படிச் செய்து விவசாயத்தை ஊக்குவித்தது. அது ஓர் அற்புதம்தான். இன்றைக்கு இஸ்ரேல் நவீன விவசாயத்தில் எத்தனையெத்தனையோ சாதனைகளைச் செய்துகாட்டியிருக்கும் நிலையில், துளி அறிவியல் வாசனையும் இல்லாத காலத்தில் ஹெரோத் மன்னர் அங்கே விவசாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது வியப்புக்குரிய விஷயம்.
பாழ் நிலங்களைச் செம்மைப்படுத்தி நகரங்களாக்கியது, விதவிதமான கட்டடங்களைக் கட்டுவித்தது (ஹெரோத் கிரேக்க கட்டடக்கலை, கலாசார விஷயங்களில் ஒரு மயக்கம் கொண்டிருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலில் அதன் பிரதிபலிப்புகள் அதிகம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) போன்ற சில செயல்கள் குறிப்பிடப்பட வேண்டியவை.

கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் ஜெருசலேம் நகரிலிருந்த புராதனமான யூத ஆலயம் (மன்னர் சாலமன் காலத்தில் கட்டப்பட்டது)
பல்வேறு தாக்குதலுக்கு இலக்காகி, சிதைந்துபோயிருந்தது. ஒரே ஒரு சுவர்தான் அதில் மிச்சம். கொடுங்கோலன் ஆனாலும் பக்திமானாக இருந்தஹெரோதின் காலத்தில் அந்தக் கோயில் இருந்த இடத்திலேயே இரண்டாவது முறையாகக் கோயில் எழுப்பப்பட்டது.
பழைய கோயில் இருந்த நிலப்பரப்புடன் இன்னும் கொஞ்சம் நிலத்தை இணைத்து, உறுதியான கட்டுமானத்தில் கோயில் உருப்பெற ஹெரோத் உத்தரவிட்டார். தவிர கோயிலைச் சுற்றி இருந்து, சிதைந்துபோயிருந்த சுற்றுச் சுவரையும், அதன் பழைய மிச்சங்களுடனேயே மீண்டும் புதுப்பித்து முழுமைப்படுத்தினார்.

இந்தக் கோயிலைக் கட்டுவதற்காக பத்தாயிரம் ஊழியர்களும் ஆயிரம் மதகுருக்களும் பணியில் அமர்த்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. சுமார் ஒன்பதாண்டுகால உழைப்புக்குப் பின் ‘ஹெரோதின் இரண்டாவது ஆலயம்’ என்று அழைக்கப்பட்ட அந்தப் புராதனமான கோயிலின் மறு உருவாக்கப்பணி முற்றுப்பெற்றது.

ஹெரோதின் ரோமானிய மோகமும் கிரேக்க கட்டடக்கலைத் தாக்கமும் அக்கோயிலின் கட்டுமானத்தில் மிகுந்திருந்ததாக ஒரு விமர்சனம் உண்டென்றாலும், அந்தக் காலத்தில், அதற்குமுன் அப்படியரு பிரமாண்டமான கலைப்படைப்பு வேறெங்கும் கிடையாது என்று அடித்துச் சொல்கிறது யூத சரித்திரம்.

இந்தக் கோயிலைக் கட்டிய ஒரு காரணத்தினால் மட்டுமே யூதர்கள் இன்றுவரை ஹெரோத் மன்னரை நினைவிலும் சரித்திரத்திலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவரது காலத்தில் நடந்த அட்டூழியங்களை விமர்சனம் இல்லாமல் ஒரு செய்திபோலவே சரித்திரத்தில் பதிவு செய்கிறார்கள்.

ஹெரோதின் ஆட்சி முப்பத்துமூன்று வருடங்கள்தான். அது அத்தனை பெரிய பிரச்னை இல்லை. ஆனால் அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒரு சம்பவம் நடந்தது. பின்னால் மாபெரும் சரித்திரமான சம்பவம்.

ஒரு பிறப்பு. பிறக்கும்போதே ‘இது சாதாரணக் குழந்தை இல்லை’ என்று வானவர்கள் அறிவித்துவிட்ட பிறப்பு. யூத குலத்திலேயே நிகழ்ந்த பிறப்பு. யூத குலத்துக்கே ஒரு பெரிய சவாலாகப் பின்னால் விளங்கப்போகிற பிறப்பு. ஹெரோத் மன்னன் கட்டுவித்த கோயில் மீண்டும் இடிபடப் போகிறது என்று தீர்க்கதரிசனமாகப் பார்த்துச் சொன்னவரின் பிறப்பு.

அந்தக் குழந்தைக்கு ஜோஷுவா (Joshua) என்று பெயரிட்டார்கள். அது ஹீப்ரு மொழிப்பெயர். ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்று அது வழங்கப்படும். நமக்கு இயேசு என்றால் புரியும்.

உண்மையில் யூத மதத்துக்கு விடப்பட்ட முதல் பெரிய சவால், கிறிஸ்தவம் தோன்றி, பரவ ஆரம்பித்தபோதுதான் நேர்ந்தது.
இயேசுவை வைத்துக்கொள்ளவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள். தேவகுமாரன் என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் இயேசுவை ஒரு கலகக்காரராக மட்டுமே யூதர்களால் பார்க்க முடிந்தது.
புராதனமான தமது மதத்தின் பெருமைகளைக் கெடுக்கவந்த ஒரு குட்டிச்சாத்தானாகவும் பார்த்தார்கள்.

அங்கே கம்சனின் பெயர் ஹெரோத். இரண்டாவது கோயிலைக் கட்டிய அதே யூதமன்னன் ஹெரோத். ஏரோது மன்னன் என்று பைபிள் குறிப்பிடுவது இவரைத்தான்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 2 டிசம்பர், 2004

4] கி.பி.
நிலமெல்லாம் ரத்தம் 4 - பா.ரா

யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி.

மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான். ஆனால் இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை.

பெத்லஹெமில் (Bethlehem) இயேசு பிறந்தபோதே யூத மதகுருமார்கள் உள்ளுணர்வின் மூலமும் பழைய வேத வசனங்களின் மூலமும் அவரை அடையாளம் கண்டு, ஹெரோத் மன்னரிடம் இயேசுவின் பிறப்பைக் குறித்துத் தெரிவித்துவிட்டார்கள்.

‘இஸ்ரேல் மக்களை ஆளப்போகும் தலைவன் இன்ன இடத்தில், இன்ன காலகட்டத்தில் பிறப்பான்’ என்று எழுதி வைக்கப்பட்ட பழைய தீர்க்கதரிசன வரிகளைச் சுட்டிக்காட்டி அவனுக்குத் தகவல் சொன்னார்கள்.
ஹெரோத் ஒரு மன்னன். அதுவும் சர்வாதிகாரி. ‘மக்களை ஆளப்போகும் தலைவன்’ என்கிற பிரயோகம் அவனுக்கு ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே தரமுடியும். அதாவது, தன் பதவிக்கு ஆபத்து.

ஆகவே இயேசுவைக் கொன்றுவிட விரும்பி, ஆட்களை ஏவினான் ஹெரோத்.
உயிர்பிழைக்க, இயேசுவின் தந்தை ஜோசப், தம் மனைவி மேரியை (ஹீப்ரு மொழியில் மிரியம் Miriam) அழைத்துக்கொண்டு, குழந்தையுடன் எகிப்துக்குத் தப்பிப்போனார். பயமும் வெறுப்பும் மிகக்கொண்ட ஹெரோத், இந்த விஷயம் தெரியாமல் பெத்லஹெமில் அப்போது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எத்தனைபேர் இருந்தார்களோ, அத்தனை பேரையும் கொன்று வீசினான்.
கொன்ற குழந்தைகளில் ஒன்று எப்படியும் இயேசுவாக இருக்கும் என்கிற குருட்டு நம்பிக்கை!

ஹெரோத் உயிரிழக்கும்வரை இயேசு ஜெருசலேமுக்குத் திரும்பி வரவில்லை. மன்னன் இறந்த செய்தி கிடைத்தபிறகே அக்குடும்பம் ஊர் திரும்ப முடிவு செய்தது. அப்போதும் கூட ஹெரோதின் மகன்தான் பட்டத்துக்கு வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டு ஜெருசலேமுக்கு வராமல் நாசரேத்துக்குப் போய்விட்டார்கள்.

இயேசுவுக்கு அப்போது எட்டு வயது. தமது வாலிப வயதில்தான் முதல்முதலில் ஜெருசலேமுக்கு வந்தார் இயேசு. இளைஞர் இயேசுவை அங்கே மிகவும் கவர்ந்த இடம், கோயில். கி.மு. 950_ல் முதல்முதலில் கட்டப்பட்ட கோயில். பிறகு இடிக்கப்பட்டு, பல்லாண்டுகாலம் இருந்த அடையாளம் மட்டுமே மிச்சமிருக்க, ஹெரோத் மன்னரால் மீண்டும் கட்டப்பட்ட கோயில்.

மணிக்கணக்கில், நாள்கணக்கில் கோயிலிலேயே இருந்தார் அவர். பல சமயங்களில் சுயநினைவின்றியே பிரார்த்தனையில் தோய்ந்திருந்தார். அப்போதெல்லாம் ஜெருசலேம் மக்கள் அவரை ஒரு தேவதூதராக யோசித்துப் பார்க்கவில்லை. பக்தி மிக்க ஓர் இளைஞர். அவ்வளவுதான்.

‘இதோ, தேவதூதன் வருகிறான், வரப்போகிறான், வந்தேவிட்டான்’ என்று தொடர்ந்து இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்த ஜான் என்கிற பாதிரியாரிடம் (யோவான் என்று பைபிள் சொல்லும். ஒட்டக ரோமத்தால் ஆன உடை அணிந்தவர், வெட்டுக் கிளியையும் காட்டுத்தேனையும் உணவாக உட்கொள்பவர் என்றெல்லாம் ஜானைப் பற்றிய நுணுக்கமான விவரங்களைத் தருகிறது பைபிள்.)
ஜோர்டன் நதி தீரத்தில் ஞானஸ்நானம் பெற்று இயேசு தன் பேருரைகளை நிகழ்த்தத் தொடங்கியபோதுதான் மக்கள் அவரைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.அவரைத் தனித்துக்காட்டிய முதல் விஷயம், அவர் தம்மை ‘மனிதகுமாரன்’ (பைபிளில் மனுஷகுமாரன் என்று வரும். Son of Man) என்று குறிப்பிட்டது. இது மிக முக்கியமான குறிப்பு.
ஏனெனில் யூதகுலம் அப்படியருவனைத்தான் காலம் காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. யூதர்களின் வேதத்தில், மனிதகுமாரன் எப்படி இருப்பான் என்பது பற்றி ஒரு குறிப்பு உண்டு.

இறுதித் தீர்ப்பு நாளில் நீதி வழங்கும் நீதிபதியைப்போல் அவன் இருப்பான் என்று தான் கனவில் கண்டதாக யூதர்களின் வேதத்தில் டேனியல் என்கிற தீர்க்கதரிசி எழுதிய பகுதிகளில் வருகிறது.

டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப்பற்றியதுதான் என்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. ‘கர்த்தரால் மனிதகுமாரனுக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர் விளக்கிய விஷயங்கள் கூட படர்க்கையில்தான் (Third person) வருகின்றனவே தவிர ஒருபோதும் ‘கர்த்தரால் எனக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர்
குறிப்பிட்டதில்லை.

இயேசுவை ஏற்க மனமில்லாத யூதர்கள், இதையெல்லாமும் ஆதாரமாகக் காட்டி, ‘வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதகுமாரன் இவர் அல்லர்’ என்று சொன்னார்கள்.

ஆனால், இதெல்லாம் இயேசுவுக்கு ஆதரவாளர்கள் பெருகுவதைத் தடுக்கவில்லை. காரணம், எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர் ஒரு தெய்வீக மருத்துவராக இருந்தார்.

குருடர்களைப் பார்க்கச் செய்வது, செவிடர்களைக் கேட்கச் செய்வது, ஊமைகளைப் பேசச்செய்வது முதல், இறந்த ஒரு குழந்தையை உயிர் பிழைத்து எழச்செய்தது வரை அவர் நிகழ்த்திய அற்புதங்களை பைபிள் பக்கம் பக்கமாக விவரிக்கிறது.

எளிய மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு பின்பற்ற இது ஒரு முக்கியக்காரணம். பிறகு அவரது மலைப் பிரசங்கங்கள். அதில் இருந்த எளிமை. ஏழைகளின் மீதான பரிவு.

வன்முறைக்குப் பதிலாக வன்முறையை அல்லாமல் சமாதானத்தைத் தீர்வாகச் சொன்ன நூதனம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு நெருக்கடி என்றால் மதவழக்கத்தை மீறுவதும் தவறல்ல என்கிற முற்போக்கு மனப்பான்மை.

யூதர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அவர்களுக்கு ஓய்வுநாள். அன்று எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். முற்றிலும் பிரார்த்தனைக்கான தினம் என்று பொருள். (Sabbath day)
அப்படியான ஒரு தினத்தில் இயேசு ஒரு தேவாலயத்தில் கை ஊனமாகி, சூம்பிய நிலையில் இருந்த ஓர் ஏழையைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார். (மத்தேயு 12:10)இது மத விரோதச் செயல் என்று யூத குருமார்கள் குற்றம் சாட்டினார்கள். ‘மனுஷகுமாரன், ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்’ என்று சொல்லிவிட்டார் இயேசு.

“உங்கள் ஆடு ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால் உடனே போய் தூக்கி எடுக்கமாட்டீர்களா? ஆட்டைவிட மனிதன் எவ்வளவோ மேலானவன்’’ என்கிற அவரது மனிதநேயம் அங்கே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. மதத்துரோகி என்பதாக அவர் வருணிக்கப்பட்டார்.

இயேசுவைக் கொல்லவும் முடிவு செய்தார்கள்.
இந்த ஒருமுறை மட்டுமல்ல. இம்மாதிரி பல தருணங்களில் கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து வேறு வேறு இடங்களுக்குப் பயணம் செய்தபடியே இருந்தார் அவர். போகிற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அவர் பின்னால் போனது.இதன் தொடர்ச்சியாகத்தான் ஜெருசலேம் தேவாலய மதகுருமார்களின் நடத்தை மீதான அவரது விமர்சனங்களும், கோயில் நிச்சயமாக இடிக்கப்படும் என்கிற தீர்க்கதரிசனமும், அவரைக் கொலை செய்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானத்துக்கு யூத மதகுருக்களைக் கொண்டுவந்து சேர்த்தன.

தாம் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் இரவு, தமது பன்னிரண்டு சீடர்களுடன் இறுதி விருந்து அருந்தினார் இயேசு. யூதாஸ் என்கிற சீடன் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக அவரை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்க உடன்பட்டான்.அன்றிரவு அது நடந்தது. இயேசு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது யூத மதகுருக்கள் அனுப்பிய அடியாள்களுடன் அங்கே வந்த யூதாஸ், இயேசுவை நெருங்கி முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான்.
உடனே அவரைக் கைது செய்து இழுத்துப்போனார்கள்.
ஆனால், அவர்கள் முன்னமே தீர்மானித்திருந்தபடி இயேசுவுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டுமானால் அதற்குப் போதிய காரணங்கள் வேண்டும். சாட்சிகள் வேண்டும்.

ஜெருசலேமில் அப்படியான காரணங்களையோ, அவற்றைச் சுட்டிக்காட்டும் சாட்சிகளையோ குருமார்களால் உடனே தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஆகவே, கஷ்டப்பட்டு இரண்டு பொய்சாட்சிகளைத் தேடிப்பிடித்தார்கள். அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு இதுதான்:

ஜெருசலேம் நகரின் பெருமைமிக்க கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கவும், மூன்றே நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று இயேசு சொன்னார்.

போதாது? மரணதண்டனை விதித்துவிட்டார்கள். ஆனால் ஒரு மரியாதைக்காகவாவது மன்னருக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தியாக வேண்டும்.

அப்போது இஸ்ரேல், ரோமானியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ரோம் மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் பான்ட்டியஸ் பிலாட் (Pontius Pilate பைபிளில் பொந்தியு பிலாத்து என்று குறிப்பிடப்படும் பிலாத்து மன்னன் இவனே.) ஆட்சிசெய்துகொண்டிருந்தார்.

வழக்கைக் கேட்ட அவருக்கு, இது ஓர் அநியாயமான வழக்கு என்றே தோன்றியது. ஆயினும் மதகுருக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டத்தினர், இடைவிடாமல் ‘இயேசுவுக்கு மரணதண்டனை தந்தே ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தியதால், வேறு வழியில்லாமல் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக ஒரு சம்பவம் நடந்தது. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், தன் பிழைக்கு வருந்தி, குற்ற உணர்ச்சி மேலோங்க, தற்கொலை செய்துகொண்டான். முன்னதாக, தனக்கு சன்மானமாக அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளையும் மதகுருக்களிடமே திருப்பிக்கொடுத்துவிட்டுத்தான் வந்திருந்தான்.

கொஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒருவிநாடி சலனமடைந்து அவன் செய்த காரியம் இயேசுவின் உயிரைக் குடித்தது. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய இரும்புச்சுவர் ஒன்று எழுப்பப்படுவதற்கும் காரணமானது. யூதாஸ் தன் தவறுக்கு அன்றே வருந்தியதும், தற்கொலை செய்து கொண்டதும், யாருக்கும் ஒரு பொருட்டாக இல்லை.

அவனைத் தூண்டிவிட்ட யூத மதகுருக்களே கூட, ‘குற்றமில்லாத ரத்தத்தைக் காட்டிக்கொடுத்து நான் பாவம் செய்தேன்’ என்று வருந்திய யூதாஸிடம், ‘எங்களுக்கென்ன? அது உன்பாடு!’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
இஸ்ரேலின் கவர்னராக பிலாட் இருந்தது, கி.பி. முதல் நூற்றாண்டின் 27லிருந்து 36_ம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலம் என்று சரித்திரம் சொல்கிறது. இதனடிப்படையில் இயேசுவின் மரணம் 30_35_ம் ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது. துல்லியமான விவரங்கள் ஏதும் இதுபற்றிக் கிடையாது.

சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து அவர் விண்ணுக்குச் சென்றார் என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைதான் யூதர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டும் முதல் ஆதாரம். ஏனெனில், யூதர்களின் நம்பிக்கையின்படி, மரணத்துக்குப் பின் தேவதூதன் உயிர்த்தெழுவதென்பது கிடையாது. வேறுபாடு அங்கேதான் தொடங்குகிறது.

இயேசு உயிர்த்தெழுந்ததாக நம்பியவர்கள், இயல்பாக சனாதன யூதர்களிடமிருந்து கருத்தளவில் விலகிப்போனார்கள். இயேசுவுக்குப்பின் அவர் விட்டுச்சென்றதைத் தொடரும் பொறுப்பின் தலைமை அதிகாரியாக இருந்த ஜேம்ஸ், (ஹீப்ரு மொழியில் ஜேக்கப். பைபிளில் யாக்கோபு என்று வரும்.) அவர்களின் வழிகாட்டியாக இருந்தார்.

கி.பி.62_ல் ஜேம்ஸும் யூதர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்தும் தீவிரமாகவும் அவர் இயேசுவை தேவகுமாரனாகவும் கடவுள் அம்சம் பொருந்தியவராகவும் சித்திரித்துச் சொற்பொழிவுகள் ஆற்றியதே இதற்குக் காரணம்.ஜேம்ஸுக்குப் பிறகு ஜெருசலேம் நகரின் கிறிஸ்தவ தேவாலயத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சைமன்.
இவர்களெல்லாம் இயேசுவின் மறைவுக்குப் பிறகு ஜெருசலேம் நகரில் இருந்தபடியே தமது பிரசாரங்களை நிகழ்த்திவந்தார்கள்.
ஆனால், முதல் முதலாக கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதை ஓர் இயக்கமாக ஆரம்பித்துச் செயல்படுத்தியவர், பால். (Paul. பைபிளில் பவுல் அப்போஸ்தலர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.)

ஸால் (Saul) என்ற இயற்பெயர் கொண்ட யூதரான இவர், கிறிஸ்தவ மதத்தை நம்பி ஏற்றபிறகு பால் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். துருக்கியில் பிறந்த பால், மத்திய ஆசியாவெங்கும் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு, மத்தியதரைக்கடலின் கிழக்குக் கரை வழியே மிக நீண்ட பயணம் மேற்கொண்டார்.

உண்மையும் உருக்கமும் கொண்ட அவரது பேச்சால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கவரப்பட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். ஊர் ஊராக, நகரம் நகரமாக, தேசம் தேசமாக கிறிஸ்தவ மதம் வேகம் கொண்டு பரவத் தொடங்கியது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 5 டிசம்பர், 2004
தொடரும்... மீண்டும் வாருங்கள்.


0 comments:

Post a Comment

Newer Post Home Older Post
Subscribe to: Post Comments (Atom)

Categories

  • A MOVIE
  • dr
  • health
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS
  • ISLAM
  • KAVITHAI
  • new tamil mp3
  • puplic
  • tech
  • இந்தியன் lovers
  • இஸ்லாம்
  • நித்யா

Photostream

bjghtotfnbovtytvobuiygrcvbhijpiutgbgu
M.FROZALI MURARBADU +917373118517

My site is worth$967.28Your website value?

ANY WHERE ANY TIME CONNECTING PEOPLE
frozali. Powered by Blogger.
very cheap calling card india mobile 1200 min land line 1000 min just 75 saudi riyal only contact: +966533693467

Followers

Blog Archive

  • May (2)
  • Jul (7)
  • Mar (48)
  • May (1)
  • Jun (3)
  • Jun (1)
  • Jun (5)
  • Jul (1)
  • Dec (1)
  • Apr (1)

Hello there!

Follow us

Bookmark and Share

Tags

  • A MOVIE (12)
  • dr (1)
  • health (5)
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS (1)
  • ISLAM (9)
  • KAVITHAI (4)
  • new tamil mp3 (2)
  • puplic (1)
  • tech (4)
  • இந்தியன் lovers (1)
  • இஸ்லாம் (1)
  • நித்யா (1)
Premium Blogger Templates
Copyright © 2013 WELCOME TO MURARBADU - and Free Blogger Templates.