1-2. நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. பகுதிகள் 1-2.
Posted by
frozali
at
9:54:00 pm
முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு இபுறாஹிம் (அலை ) முதல் இஸ்லாமிய வரலாற்று சுருக்கம்.
மொத்தம் 100 பகுதிகள். இது தொடர்ந்து வரும் ஆதலால் வாசகர்கள் இப்பக்கத்தை FAVORITE / BOOKMARK ல் பதிந்து கொள்வதுடன் தாங்களுக்கு தெரிந்தவர்கள் , நன்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி அனைவரையும் தாங்களின் பிள்ளைகளையும் படிக்க செய்யுங்கள்.
வாசகர்கள் அறிந்திராத விஷய களஞ்சியம். சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்.
முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.
*************************************************
சேமித்தவனின் (அபு உமர்) முன்னுரை .
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு. தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக.
எழுத்துக்கள் பலவகை உண்டு. ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள்.
குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வருவதை சேமிப்பதில் எனக்கு முன்னோடி, நண்பர் கிருஸ்டோபர் ஜான் அவர்கள். அவரிடமிருந்து நானும் சேமித்து வைக்கிறேன்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய இன்றைய பதிவுகள்தான் நாளைய வரலாறு. இது இஸ்லாம் அல்லாத ஒருவரின் ஆய்வு என்பதை மீண்டும் நினைவுப் படுத்திக்கொள்கிறேன்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் பா.ராகவன் ஜான் கிரிஸ்டோஃபர் .---- (அபு உமர்)
******************************************
நிலமெல்லாம் ரத்தம்- ஆசிரியர் பா. ராகவன்.
களத்துக்கு நேரே சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் ஆய்வாளன் அல்ல நான். அதற்கான வசதி வாய்ப்புகளுமமிங்கே இல்லை. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. சில வல்லுநர்கள் அவ்வப்போது பிழை திருத்தி உதவியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இனி, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான ஆதாரங்களின் பட்டியல் மற்றும் நன்றிக் குறிப்பு:
உதவிய நூல்களின் பட்டியல்:
1. பரிசுத்த வேதாகமம் (பைபிள் சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடு)
2. The Holy Qur - An - English Translation of the Meanings and commentary - The Presidency of Islamic Researches, IFTA, Soudi Arabia வெளியீடு.
3. 'The 5000 Year History of the Jewish People and Their Faith. (மார்ட்டின் கில்பர்ட், Phoenix வெளியீடு)
4. A Historey of the Middle East - Peter Mansfield, பெங்குயின் வெளியீடு.
5. The Politics of Dispossession - Edward Said
6. Peace and its Discontents - Edward Said
7. Muhammad: His life based on the earliest sources - Martin Lings
8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)
9. O, Jerusalem - Larry Collins, Dominique Lapierre
10. The Middle East : Yesterday and Today - Edited by David W. Miller, Clark D. Moore (Bantom Books)
11. Umar The Great - Allamah Shibli Nu'mani (Muhammad Ashraf, Pakistan)
12. மத்தியக் கிழக்கின் சிறப்பு வரலாறு - அ. உஸ்மான் ஷெரீப், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
13. Israel and the Arabs - Israel Communications, Jerusalem
14. 90 Minutes at Entebbe, William Stevenson (Bantam Books, New York)
15. நபிகள் நாயகம், அப்துற் றஹீம் (யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை)
16. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி (கிழக்கு பதிப்பகம், சென்னை)
17. ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு, மு. குலாம் முஹம்மது (இலக்கியச் சோலை, சென்னை 600 003)
18. பாலஸ்தீன வரலாறு (பாகம் 1), எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (புத்தொளிப்பதிப்பகம், சென்னை 600 001)
19. Cross Roads to Israel, Christopher Sykes (collins, UK)
20. State of Palestine, Esam Shashaa
21. Palestine Refugees, Esam Shashaa
22. In the arms of a Father, Haneen al - Far
23. UN Report, Intifada, United Nations Publication
24. Ancient History of Palestine, Abu Sharar
சில சொற்கள்:
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு வெளியீடுகள், ஏராளமான இணையத்தளங்களின் தகவல் உதவிகள் இல்லாமல் இத்தொடர் சாத்தியமாகியிருக்க முடியாது.
நிலமெல்லாம் ரத்தம் தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து, அத்தியாயம் தோறும் இதன் தகவல்களைச் சரிபார்த்து, உரிய திருத்தங்கள் செய்துதந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் தேவைப்பட்ட பல அபூர்வமான நூல்களையும் அளித்து உதவியவர் பேராசிரியர், எழுத்தாளர் நாகூர் ரூமி. (மஸ்ஹரூல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.) இந்தத் தொடருக்காக
அவருக்குப் பல தூக்கமில்லாத இரவுகளை வழங்கியிருக்கிறேன். பொறுமையுடன் உதவிகள் புரிந்த அவருக்கு என் நன்றி.
சென்னை இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் அமைப்பும் சமரசம் மாத இதழின் ஆசிரியர் சிராஜுல் ஹஸன் அவர்களும் சில முக்கியமான புத்தகங்களை வழங்கி உதவினார்கள்.
எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஏராளமான வாசக அன்பர்கள் பாலஸ்தீன் தொடர்பாகத் தம்மிடம் இருந்த அத்தனை புத்தகங்களையும் சிறு வெளியீடுகளையும் இந்த ஒரு வருடகாலமும் எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்த அன்புக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வாசகர்கள் ஏ. ஜாகீர் மற்றும் தூளான்; சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வாசகர் வெங்கடேசன், ஊட்டி ரன்னிமேடு பகுதியைச் சேர்ந்த வாசகர் தேவசகாயம், கோவையைச் சேர்ந்த முகம்மது கனி ஆகியோரின் ஆர்வத்தைத் தனியே குறிப்பிட விரும்புகிறேன். பாலஸ்தீன் பிரச்னை தொடர்பாக இதுகாறும் இந்தியாவில் வெளியாகியுள்ள
அத்தனை பத்திரிகைக் குறிப்புகள், பேட்டிகள், கட்டுரைகள், ஆய்வுக் குறிப்புகளையும் எங்கெங்கிருந்தோ தேடி நகலெடுத்து எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தவர்கள் இவர்கள்.
இந்தத் தொடர், சர்வதேசத் தமிழ் வாசகர்கள் அத்தனை பேரையும் சென்றடையவேண்டும் என்கிற நோக்கில், ரிப்போர்ட்டரில் வெளியானவுடனேயே ஒவ்வொரு வாரமும் பிரதியெடுத்து, தட்டச்சு செய்து, ரிப்போர்ட்டருக்கு நன்றி சொல்லித் தனது பிரத்தியேக வலைப்பதிவில் வெளியிட்டுவந்த தைவானைச் சேர்ந்த ரிப்போர்ட்டர் வாசகர் கிறிஸ்டோ
பர் ஜான் அவர்களுக்கு என் அன்பு.
இந்தப் பணி இந்த அளவில் சாத்தியமானதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் புரிந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்வமுடன் வாசித்து, அவ்வப்போது கடிதங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் உற்சாகமூட்டிய வாசகப் பெருமக்களுக்கும்..
ஆசிரியர் பா. ராகவன்.
***************************************************
1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்
நிலமெல்லாம் ரத்தம் - பா.ரா 1
ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு.
இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை
வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள்,
அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.
இது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். "அப்பா, செத்தானே" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை.
யாசர் அராஃபத்தின் மரணத்தால் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய இஸ்ரேலியத் தலைவர்கள் கூட, நவம்பர் 11, 2004 அன்று ரமல்லா நகரில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் குழுமிய கூட்டத்தின் கேவல் ஒலியில், சற்றே அசந்துதான் போனார்கள். எந்தத் தருணத்திலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ராணுவ வீரர்கள் அன்று
அழுதபடியே அணிவகுத்துச் சென்றார்கள்.
இறுதிச் சடங்குகளைப் படமெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிச் செய்தியாளர்களும் கண்கலங்கி, ரகசியமாகத்
துடைத்துக் கொண்டதைத் தொலைக்காட்சியில் நாம் பார்த்தோம்.
பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக் கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து,
இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.
காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார்.
முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை. அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது.
மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.
அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.
எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.
பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை.
புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி
இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள்.
அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.
எங்கே பாலஸ்தீன்?
அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே.
ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே
செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை.
இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை.
கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.
அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள்.
அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது.
யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.
அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (ỆAhmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?
அதுதான் பிரச்னை. பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது.
அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை க
ருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.
இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன.
1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது.
எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது.
கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள்.
ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.
இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை.
நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.
எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள்.
இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழவழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை.
சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள்,
1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள்.
வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும்
அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்?
விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?
தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன?
இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 நவம்பர், 2004
2] ஆப்ரஹாம் முதல்
நிலமெல்லாம் ரத்தம் 2 - பா.ரா
அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.
ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும்? தானே இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான்.
எண்பத்தைந்தெல்லாம் அப்போது ஒரு வயதே அல்ல. ஆகவே அவர் துணிந்து தன் வேலைக்காரியைத் தன் கணவருக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்தார்.
சொல்லிவைத்த மாதிரி அந்தப் பெண் உடனே கர்ப்பம் தரித்துவிட்டாள்.
அதுவரைக்கும், தன் கணவன் வாரிசில்லாமல் போய்விடக்கூடாதே என்று மட்டுமே நினைத்து வந்த அந்தப் பெண்மணிக்கு, தன் வேலைக்காரி கர்ப்பமானது தெரிந்தது முதல், துக்கமும் பொறாமையும் பொங்கியெழ ஆரம்பித்துவிட்டது. அவளைப் பற்றி அடிக்கடி தன் கணவரிடம் குறை கூற ஆரம்பித்தாள்.
பெரியவருக்கு தன் முதல் மனைவியின் மனநிலை புரிந்தது. அவரால் என்ன செய்துவிடமுடியும்? இதோபார், உன் இஷ்டம். உன் சௌகரியம். அவளை இங்கே வைத்துக்கொள்ள இஷ்டமில்லையென்றால் வெளியே அனுப்பிவிடு. நீ பார்த்துக் கொடுத்த பெண்தான் அவள். உனக்காகத்தான் அவளை மணந்தேன். உனக்குப் பிடிக்கவில்லையென்றால் அனுப்பிவிடுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு எத்தனை சங்கடமாக இருந்திருக்கும்! ச்சே என்று வெறுத்தே போனாள். சொல்லிக் கொள்ளாமல் அந்தக் கணமே வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டாள். ஆனால் வழியில் யாரோ நல்ல புத்தி சொல்லி அவளைத் திரும்ப வீட்டுக்குப் போகும்படி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
பெரியவருக்கு எண்பத்தாறு வயதானபோது அவரது இரண்டாவது மனைவியான அந்த வேலைக்காரப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது.
சந்தோஷம்தான். இந்த வயதில் இப்படியும் விதித்திருக்கிறதே என்கிற சந்தோஷம். ஆனாலும் தன் முதல் மனைவி மூலமாக ஒரு குழந்தை இல்லாத வருத்தமும் இருக்கவே செய்தது.
பெரியவருக்கு இப்போது தொண்ணூற்றொன்பது வயது. அவரது மகனுக்கு பன்னிரண்டு வயது. முதல் மனைவிக்கு எண்பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவியின் வயது அப்போது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.
இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது என்று ஒரு குரல் கேட்டது. பெரியவரால் இதை நம்ப முடியவில்லை. இதென்ன கூத்து? நானோ தொண்ணூற்றொன்பது வயதுக்கிழவன். என் மனைவிக்கு என்னைவிடப் பத்து வயதுதான் குறைவு. இந்த வயதில் இன்னொரு குழந்தை எப்படி சாத்தியம் என்று அவநம்பிக்கையாகக் கேட்டார்.
அதுசரி. கடவுள் தீர்மானித்துவிட்டால் வயது ஒரு பிரச்னையா என்ன?
சீக்கிரமே அவரது முதல் மனைவி கருவுற்றாள். அடுத்த வருடம் குழந்தையும் பிறந்துவிட்டது. அவருக்கு அப்போது நூறு வயது. இரண்டு மனைவிகள். இரண்டு ஆண் குழந்தைகள். இதற்கு மேல் என்ன? நிம்மதியாகக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, அந்தக் குடும்பம் ஒரே வீட்டிலேயே
தழைத்திருந்திருக்கலாம்.
ஆனால் சக்களத்திப் பிரச்னை இப்போது முன்னைக்காட்டிலும் தீவிரமடைந்துவிட்டது. இது அவரை வருத்தியது. ரொம்ப நாள் இச்சிக்கலை இழுத்துக்கொண்டே போகமுடியாது என்று முடிவு செய்தவர், தமது இரண்டாவது மனைவியை ஒருநாள் அழைத்துப் பேசினார்.
குடும்ப அமைதியின் பொருட்டு அவள் அந்த வீட்டைவிட்டு வெளியேறி விடவேண்டும் என்றும் சொன்னார். என்னதான் அவள், அவருக்கு முதல் முதலில் வாரிசு என்று ஒன்றை உருவாக்கி அளித்தவள் என்றாலும், பெரியவரால் தன் மூத்த மனைவிக்குப் பிறந்த குழந்தையைத்தான் உண்மையான வாரிசாக எண்ண முடிந்தது.
மனிதர்கள் விசித்திரமானவர்கள். சில சந்தர்ப்பங்களும் விசித்திரமானவையாகவே அமைந்துவிடுகின்றன.
மறுபேச்சில்லாமல் அந்தப் பெண், தனக்குப் பிறந்த மகனை அழைத்துக்கொண்டு அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.
அந்தப் பெரியவர் இன்னும் எழுபத்தைந்து வயதுகாலம் வாழ்ந்தார். தம் முதல் மனைவி இறந்த பிறகு வேறொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். அவள் பெயர் கேதுரா (Keturah) அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.
கதையென்று நினைத்தால் கதை. வாழ்க்கை என்று நினைத்தால் வாழ்க்கை. ஆனால் இஸ்ரேலிய யூதர்களுக்கும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குமான பிரச்னையின் மூலவித்து மேற்சொன்ன பெரியவரிடமிருந்துதான் தொடங்குகிறது.
அவர் பெயர் ஆபிரஹாம் (Abraham இபுறாஹிம் (அலை )). அவருடைய முதல் மனைவியின் பெயர் சாரா. சாராவிடம் வேலைக்காரியாக (அடிமையாக) இருந்த பெண் ஆகார் Hagar ஹாஜிரா (அலை)) அவள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் இஸ்மயீல் (Ishmael இஸ்மாயில் (அலை) ). சாராளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் ஈஸாக் (Issacc).
ஆபிரஹாமால் வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஆகாரின் மகனான இஸ்மயீலின் வம்சத்தவர்கள்தான் அரேபியர்கள். சாராவுக்குப் பிறந்த ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள்.
(இந்த வகையில் யூதர்களைக் காட்டிலும் அரேபியர்கள் பன்னிரண்டு வயது மூத்தவர்கள் என்றாகிறது.)
ஈஸாக் பிறந்ததை முன்னிட்டுத்தான் இஸ்மயீல் வீட்டைவிட்டு விரட்டப்பட்டான். இது நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக யூதர்களின் வேதமான ‘தோரா’ (Torah) சொல்கிறது.
இஸ்ரேல்_பாலஸ்தீன் பிரச்னையின் அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னால், இப்படி தோராவிலிருந்து ஒரு கதையை நினைவுகூர்வதற்குக் காரணம் உண்டு.
யூதர்களின் வேதமான இந்நூல், மிகச் சில மாறுபாடுகளுடன் அப்படியே கிறிஸ்தவர்களின் பைபிளிலும் பழைய ஏற்பாடாக வருகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் இக்கதைகள் வருகின்றன.
மூன்று மதங்களுமே ஆதாம்_ஏவாள்தான் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மானுடப்பிறவிகள் என்பதிலிருந்து ஆரம்பித்து உலகம் தோன்றிய கதையென்று ஒரே விதமான அபிப்பிராயத்தைத்தான் கொண்டுள்ளன.
மூன்று மதத்தின் புனித நூல்களிலும் ஆபிரஹாம், மெசபடோமியாவிலிருந்து (யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியான இன்றைய ஈராக்) புறப்பட்டு, கானான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாலஸ்தீன நிலப்பகுதிக்குப் போய் வசிக்கத் தொடங்கியதை ஒப்புக்கொள்கின்றன.
அவரது சந்ததி தழைக்கத் தொடங்கியது அங்கேதான். முதலில் சாராவும் பிறகு ஆபிரஹாமும் இறந்தபோது புதைக்கப்பட்டது அல்கே ஹெப்ரான் (Hebran) என்னும் இடத்திலுள்ள மக்பெலா (Machbelah) என்ற குகையில்தான். (இந்த இடம் இப்போது ஜோர்டனில் உள்ளது.) இதே குகையில்தான் ஆதி மனிதர்களான ஆதாமும் ஏவாளும்கூட அடக்கம் செய்யப்பட்டதாக நம்பிக்கை.
இந்த நம்பிக்கையும் மூன்று மதத்தவர்களுக்கும் பொதுவானது. மக்பெலா குகை அவர்களுக்கு ஒரு புனிதத்தலம். யூதர்கள் சொல்லும் நாலாயிரம் வருடம் என்பதற்குச் சரித்திரபூர்வமான ஆதாரங்களைத் திரட்டுவது சிரமம்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்டதாக வைத்துக்கொண்டு கணக்கிட்டால், பைபிளின் பழைய ஏற்பாடு சொல்லும் காலம்தான் இது.
வழிவழியாக ஏற்கப்பட்ட நம்பிக்கைதானே தவிர அறுதியிட்டுச் சொல்ல முடியாத காலக்கணக்கு. அப்படிப் பார்த்தாலும் யூதமதம் காலத்தால் முற்பட்டதுதான்.
நோவா, ஆபிரஹாம், மோசஸ் தொடங்கி ‘தீர்க்கதரிசிகளாக பைபிள் வருணிக்கும் வம்சத்தின் கடைசி யூத தீர்க்கதரிசி என்றால் அது இயேசுநாதர்தான். இயேசுநாதருக்கு முன்பு தோன்றிய தீர்க்கதரிசிகள் யாரும் தனியே மதம் என்று ஒன்றை ஸ்தாபிக்கவில்லை.
யூதமதம் ஒன்றுதான் மத்தியக்கிழக்கில் வலுவான மதமாக இருந்திருக்கிறது. வேறு சில மேற்கத்திய _ குறிப்பாக கிரேக்க, ரோமானிய இனத்தவரின் ஆதி மதங்களும் வழிபாட்டு முறைகளும், ஆங்காங்கே பரவியிருந்தாலும், அரேபிய மண்ணிற்கே உரிய சிறுதெய்வ வழிபாடுகள் இருக்கவே செய்தாலும், ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட, ‘ஒரே கடவுள்’ என்னும்
நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்ட (யூதக் கடவுளின் பெயர் ஜெஹோவா.) உருவ வழிபாடில்லா மதம், யூத மதம்தான்.
யூதர்கள் தமக்கென்று ஒரு மொழியைக் கொண்டிருந்தார்கள்.
எபிரேயு என்று பைபிள் சொல்லும் ஹீப்ரு மொழி. புராதனமான செமிட்டிக் மொழிகளுள் ஒன்று இது. தோரா எழுதப்பட்டது இம்மொழியில்தான். கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பேசப்பட்ட, எழுதப்பட்ட ஹீப்ரு, பொனிஷியன் (Phoenician) போன்ற சில செமிட்டிக் மொழிகளுடன் பெருமளவு ஒற்றுமை கொண்டு காணப்பட்டது. ஆனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாலஸ்தீனிய யூதர்கள் பேசிய ஹீப்ரு, தன் முகத்தைப் பெருமளவு மாற்றிக்கொண்டது.
ரொம்ப கவனித்துப் பார்த்தால் மட்டுமே அது ஹீப்ரு என்று புரியும். அராபிக் தாக்கம் மிகுந்திருந்தது அப்போது. பாலஸ்தீனுக்கு வெளியே _ அரபு மண்ணின் பிற பகுதிகளில் அப்போது வாழ்ந்த யூதர்கள், அந்தந்தப் பிராந்தியங்களின் மொழியையே உபயோகித்துக்கொண்டிருந்தார்கள். இப்போதுள்ள ஹீப்ருவின் வரிவடிவம் கி.மு. முதல் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழி அது. (அரபிக் மாதிரி.)
அப்போதெல்லாம் யூதர்களின் மொழி என்பதாக ஹீப்ரு இருந்ததே தவிர, அது ஒரு தலையாய அடையாளமாகக் கருதப்படவில்லை. மதநூல்கள் மட்டுமே ஹீப்ருவில் எழுதப்படும் என்றும், அத்தகைய புனிதமான பிரதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தத்தக்க மொழி அது என்பதாகவும் ஒரு கருத்து இருந்தது. இதனாலேயே காலப்போக்கில் ஹீப்ரு இறக்கத் தொடங்கியது.
மிகச் சமீபகாலத்தில் _ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில்தான் யூதர்கள் தம் மொழியை ஒரு புதைபொருள் போல மீட்டெடுத்தார்கள்.
யூதகுலம் அழியாமல் தடுக்க, தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முழுமூச்சுடன் அவர்கள் பாடுபடத் தொடங்கியபோது, தமது அடையாளங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு ஹீப்ரு மிக முக்கியத் தேவை என்று தோன்றியது. 1880_ஆம் ஆண்டு யூத இனத்துப் பண்டிதர்கள் கூடி, ஹீப்ருவில் எழுதப்பட்ட பழைய பிரதிகளைத் தேடிக்
கண்டுபிடித்து எடுத்து ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள்.
எப்படியாவது பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்கிற தேசத்தை ஸ்தாபித்தே தீருவது என்று முடிவு செய்ததும், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் ஹீப்ரு மொழி பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள்.
1913_ஆம் வருடம் பாலஸ்தீனிலுள்ள பள்ளிகளில் ஹீப்ருவே போதனாமொழி என்கிற அளவுக்கு அதன் தாக்கம் மிகுந்திருந்தது. 1948_ல் இஸ்ல் சுதந்திரம் பெற்றதும், ஹீப்ரு அதன் தேசிய மொழியாகவே ஆகிப்போனது.
இன்றைக்கு இஸ்ரேலில் பேசப்படும் மொழி ஹீப்ரு. எழுதுவது போலவே பேசப்படும் மொழி அது. அதாவது, பேச்சு வழக்கு என்றுகூடத் தம் மொழியைச் சிதைக்க யூதர்கள் விரும்பவில்லை.
அது ஒரு அடையாளம். மிகப் பெரிய அடையாளம். ஜெருசலேம் நகரைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் பிரும்மாண்டமான சுவரைப் போல யூதர்கள் தம் அடையாளச் சுவராகத் தம் மொழியைக் கொண்டிருக்கிறார்கள்.
மொழி மட்டுமல்ல. பண்பாடு, கலாசாரம், வழிபாடு, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றிலும் தமது மூதாதையர்கள் கடைப்பிடித்த முறையையே இன்றுவரை பின்பற்றி வருபவர்கள் அவர்கள்.
இன்று தொழில்நுட்பத்திலும் விவசாயத்திலும் உலகின் அதிநவீன சூத்திரதாரிகளாக இருக்கும் அதே யூதர்கள்தான், தமது அடையாள விஷயங்களில் மிக கவனமாகத் தொன்மம் பேணிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.
பாலஸ்தீனியர்களுடனான இஸ்ரேலிய யூதர்களின் யுத்தத்துக்கு வேண்டுமானால் ஐம்பத்தாறு வயது இருக்கலாம். ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் யூதர்களின் மீது நிகழ்த்திய யுத்தத்துக்கு வயது பல நூறு ஆண்டுகள்.
ஈஸாக்கின் வழித்தோன்றல்கள், புராண காலத்தில் பட்ட கஷ்டங்களுக்குக் கதைகள்தான் ஆதாரம். ஆனால் சரித்திர காலம் தொடங்கியதிலிருந்து அவர்கள் எதிர்கொண்ட சங்கடங்களுக்கு இன்றைக்கும் ஏராளமான சாட்சியங்கள் உண்டு. பார்க்கலாம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 நவம்பர், 2004
தொடரும்... மீண்டும் வாருங்கள்.
*******************
0 comments:
Post a Comment